Friday, April 04, 2014

மான் கராத்தே - திரை விமர்சனம் / Maan karate Tamil movie review

அதாகப்பட்டது... :
இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் கதை மற்றும் தயாரிப்பில், சமீப கால வெற்றி நாயகன் சிவ கார்த்திகேயன் நடிப்பில் அதிக எதிர்பார்ப்புடன் வெளியாகி இருக்கும் படம் மான் கராத்தே. இங்கே தியேட்டர் ஹவுஸ் ஃபுல். விஜய், அஜித், சூர்யாவிற்கு அடுத்த இடத்தை சிவ கார்த்திகேயன் பிடித்துவிட்டார் என்பதற்கு அதுவே சாட்சி.(ஏற்கனவே அந்த இடத்தைப் பிடித்து, இழந்தவர் கார்த்தி!). சிவகார்த்திகேயன் அந்த இடத்தை தக்க வைத்தாரா என்று பார்ப்போம், வாங்கோ!
ஒரு ஊர்ல..:
ஐந்து நண்பர்களுக்கு ஒரு சித்தர் மூலமாக, அடுத்து நான்கு மாதங்கள் கழித்து வெளியாகப்போகும் தினத்தந்தி பேப்பர் கிடைக்கிறது. அதில் பீட்டர், பாக்ஸிங்கில் இவர்களின் துணையுடன் வெல்லும் நியூஸ் வந்திருக்கிறது. பரிசு இரண்டு கோடி ரூபாய். அந்த பீட்டரை(சிவ கார்த்திகேயன்) தேடிப்பிடித்தால், அண்ணாத்த ராயபுரம் பீட்டருக்கு பாக்ஸிங் என்றால் என்னவென்றே தெரியாத பூச்சியாக இருக்கிறார். அவரை எப்படி கெஞ்சிக் கூத்தாடி வழிக்குக் கொண்டுவந்து, இரண்டு கோடி ரூபாயை வெல்கிறார்கள் என்பதே கதை. ஏ.ஆர்.முருகதாஸின் சிம்பிளான, சுவாரஸ்யமான கதை. (சுட்ட கதையா இருக்கக்கூடாதுன்னு வேண்டிக்கிறேன், சாமியோவ்!)
உரிச்சா....:
முதல் சீனிலேயே கதைக்குள் நுழையும் ஒரு சில நல்ல படங்களில் இதுவும் ஒன்று. காட்டுக்குள் போகும் சதீஸ் அன் கோ, சித்தரை நக்கல்விட்டு, ஆயுதபூஜைக்கு அடுத்த நாள் வெளியாகும் தினத்தந்தியை வரவழைக்க முடியுமா என்று கேட்கிறார்கள். வழக்கமாக ஆயுத பூஜைக்கு லீவு என்பதால், அடுத்த நாள் பேப்பர் வராது. சித்தர் சிக்கினார் என்று பார்த்தால், பேப்பரை வரழைக்கிறார். அதில் சொல்லப்பட்டிருக்கும் விஷயங்கள் ஒவ்வொன்றாய் நடக்க, கூடவே இவர்களின் பெயரும் பீட்டரின் வெற்றிப் பேட்டியில் இருக்க, படம் பார்க்கும் நாமும் கதையுடன் ஒன்றி விடுகிறோம்.
ஓப்பனிங் சாங்குடன் ’சுறா’ எஃபக்ட்டில் அறிமுகம் ஆகிறார் சிவ கார்த்திகேயன்.நல்லவேளையாக பாடல் முடிந்ததுமே, அவரது ஃபேவரிட் அப்பாவி கேரக்டருக்குள் வந்துவிடுகிறார். சதீஸ் இவரை பாக்ஸிங்கில் கலந்துகொள்ள வைக்கவும் ட்ரெய்னிங் எடுக்க வைக்கவும் போராட, இவரோ ’என் லவ்வுக்கு ஐடியா கொடு..வீட்டுக்கு வெள்ளை அடிச்சுக்கொடு..ஃப்ரிட்ஜ் வாங்கிக்கொடு’ என்று அவர்களை பாடாய் படுத்தி எடுக்க, படம் முழுக்க ரகளையாய் போகிறது. 
போட்டியில் எதிராளியை அடித்தே கொல்லும் வில்லன் வம்சி கிருஷ்ணாவும் கலந்துகொள்ள, படம் பட்டாசாய் வெடிக்கிறது. இறுதியில் நீளமாக வரும் பாக்ஸிங் காட்சிகளைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால், படம் செம ஸ்பீடு. படத்தின் பெரிய பலம், படத்தை முழுக்க காமெடியாகவே கொண்டு சென்றிருப்பது. சதீஸின் ஒன்லைன் பஞ்ச்களும் அட்டகாசம். சிவாவை அவர் ஓட்ட, சிவா பதிலுக்கு கவுண்டர் பஞ்ச் விட, கூடவே இரண்டு ஃபிகர்களும் இருக்க, பொழுதுபோக்கிற்கு முழு கேரண்டி!
ஹன்சிகா-சிவா லவ் போர்சனைக்கூட காமெடியாகவே சொல்லி இருக்கிறார்கள். லிஃப்ட்டில் இருவருக்கும் ஒரு காமெடி சீன் வருகிறது. தியேட்டரில் அத்தனை பேரும் சிரிக்கிறார்கள். நமக்கு சிரித்தே வயிறு வலித்துவிட்டது.
பாக்ஸிங் போட்டி ஆரம்பித்து படம் சீரியஸ் ஆகும்போது, ரெஃப்ரியாக சூரியை களமிறக்குகிறார்கள். பாக்ஸிங் தெரியாத சிவா, சூரியை கதறவிடுகிறார். ஜாலியாக படம் நகர வேண்டும் என திட்டமிட்டு எடுத்திருக்கிறார்கள், அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார்கள்.
சிவ கார்த்திகேயன்:
அடுத்த சூப்பர் ஸ்டார் என்று சிலர் பில்டப்பை ஏற்றியபோது, இவரும் ஒழிந்தார் என்றே நினைத்தேன். ஏற்கனவே பிரபுதேவா, அஜித், கார்த்தி என பலரும் அந்த வார்த்தையைச் சொன்ன கொஞ்ச காலத்தில் செம அடி வாங்கி இருக்கிறார்கள். ஆனால் இந்தப் படத்தில் சிவா தப்பியிருக்கிறார்கள். முந்தைய படங்களைப் போன்றே வெகுளித்தனம், நக்கல், ஹீரோ பில்டப் இல்லாமல் சாமானியனாகவே வருகிறார்.
ஆனால் இந்த கெட்டப் தான், பாபா ரஜினி மாதிரி கேவலமாக இருக்கிறது. மீசை இல்லாமல், முள்ளம்பன்றித் தலையுடன் பல காட்சிகளில் நம்மை கஷ்டப்படுத்துகிறார். முந்தைய படங்களில் இருந்த பாந்தமான அழகு, இதில் மிஸ்ஸிங். தங்கத்தலைவி ஹன்சிகாகூட வரும்போது எப்படி இருக்கணும், கெடுத்திட்டாங்களே! பாடல் காட்சிகளில் டான்ஸ் நன்றாகவே ஆடுகிறார். தொடர்ந்து இதே போன்று அடக்கி வாசித்தால், சிவாவை யாராலும் அடிச்சுக்க முடியாது.
ஹ..ஹ..ஹன்சிகா:
இதுவரை நடிக்கத் தெரியாத மெழுகுபொம்மையாக வந்துபோன ஹன்சிகாவை, இதில் நடிக்க வைத்துவிட்டார்கள். நல்ல நடிப்பு. முன்னாடி மாதிரி கண்ணீரை பிதுக்கிவிடும் வேலையெல்லாம் இல்லை, சிம்பு புண்ணியத்தில் நன்றாகவே அழுகிறார். வழக்கம்போல் ஃப்ரெஷ்ஷாக வருகிறார். ஏற்கனவே பலவாறு வர்ணித்துவிட்டதால், இதில் ‘நெய்க்குழந்தை’ என்ற புது செல்லப்பெயரில் கூப்பிடுகிறார்கள். டார்லிங் டம்பக்கு பாடலில் ஏற்கனவே முட்டிக்கு மேல் இருக்கும் பாவாடை(?)யை இன்னும் ஏத்திவிட்டு குத்தாட்டம் போடும்போது, செத்தான் தமிழன்!
சொந்த பந்தங்கள்:
சதீஸ் அடுத்த சந்தானமாக வரலாம். செம நக்கலான டயலாக்குகளை படம் முழுக்க சொல்லிக்கொண்டே இருக்கிறார். சிவ கார்த்திகேயனின் டைமிங் காமெடிக்கு சரியான ஜோடி இவர். இதிலும் கொஞ்ச நேரமே வந்தாலும் சூரி, அளவாக நடித்து நம் மனதைக் கவர்கிறார். ’இவன் வேற மாதிரி’க்கு அப்புறம் இதில் வம்சி கிருஷ்ணாவுக்கு நல்ல கேரக்டர். வில்லனாக அசத்தி இருக்கிறார்.
டெக்னிக்கல் டீம்:
படத்தின் முதல் ஷாட்டிலே ஒளிப்பதிவாளர் சுகுமார் நம்மை அசத்திவிடுகிறார். ஆரம்ப சித்தர், அருவி காட்சிகள். ஸ்டேடியத்தை டாப் ஆங்கிளில் காட்டுவது, மாஞ்சா பாடலில் சூரியனை பிண்ணனியில் வைத்து எடுத்திருப்பது என முழுப்படமுமே நல்ல ஒளிப்பதிவு. அடுத்து, அனிருத்தின் அருமையான இசை. அனிருத் பெரிய ரவுண்டு வருவார் என்று நினைக்கிறேன். தேவாவின் குரலில் கானா பாடல் ஆகட்டும், மாஞ்சா போன்ற ஸ்டைலிஷ் படாலாகட்டும் பின்னி இருக்கிறார். ஆரம்பத்தில் சித்தருக்கு போட்ட மியூசிக்கை, சிவா கிளைமாக்ஸில் வெற்றியை நெருங்கும்போது போட்டு, பிண்ணனி இசையிலும் அசத்தியிருக்கிறார்.
நெகடிவ் பாயிண்ட்ஸ் :
- சிவ கார்த்திகேயன் கெட்டப்
- வில்லன் நல்லவரோ என்று டவுட் ஆகும்படி வரும், அவரின் மனைவியும் அவரும் பேசிக்கொள்ளும் காட்சி. அது ஆடியன்சைக் குழப்புகிறது
- கேப்டன் பிரபாகரன் - புலன் விசாரணை காலங்களில் வில்லன் ஹீரோவை அடித்து நொறுக்கிவிடுவார். பிறகு ஹீரோ செத்துப்போன ஹீரோயின்/தங்கை/பாட்டியை நினைத்து வீறுகொண்டு எழுந்து அடி பிரிப்பார். அதே ஓல்டு டெக்னிக் இங்கேயும்.
- பாக்ஸிங் போட்டிகள் ரொம்ப நேரம் நடப்பது போல் இருக்கிறது.
பாஸிடிவ் பாயிண்ட்ஸ்:
- கொஞ்சம்கூட போரடிக்காத திரைக்கதை ( இயக்குநர் திருக்குமரன்)
- வசனம் (செந்தில் குமார் என்று ஞாபகம்)
- படத்தை காமெடியாகவே கொண்டு சென்றிருப்பது
- அருமையான சூப்பர் ஹிட் பாடல்கள்
- ஹன்சிகா (ஹி..ஹி)
- நண்பர்கள் குழுவில் வரும் ப்ரீத்தி சங்கர்..நல்ல அழகு!!
- படத்திற்கு ரிச்சான லுக் கொடுத்தது
பார்க்கலாமா? :
நல்ல பொழுதுபோக்குப் படம்..தாரளமாகப் பார்க்கலாம்.

No comments: